நடிகை மற்றும் மாடல் மீரா மிதுன், பட்டியல் இன மக்களை அவதூறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியல் இன மக்களை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தன. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், வழக்கு விசாரணைக்காக மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால், 2022 ஆகஸ்டில் நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி போலீசார் மூலம் அவர் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள காவல் காப்பகத்தில் வைக்கப்பட்டார்.
நேற்று மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், “அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால், டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மேம்பட்டு, மருத்துவர்கள் பயணம் செய்யலாம் என சான்றளித்ததும், அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்” என்று அறிக்கையில் தெரிவித்தனர்.
நீதிமன்றம் இந்த அறிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.