இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பு

லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியில் தனது இசை ஆற்றலை உலகம் முழுவதும் வெளிப்படுத்திய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ் திரையுலகின் இசை வித்தகர் எனப் போற்றப்படும் இளையராஜா கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நீடித்த நிகழ்வில், சிம்பொனி இசை மட்டும் 45 நிமிடங்களுக்கு ஒலித்தது. ‘ராஜா ராஜாதி’, ‘பூவே செம்பூவே’, ‘கண்ணே கலைமானே’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பிரம்மாண்ட ஆர்கெஸ்ட்ரா வடிவில் கேட்கும் அனுபவத்தை ரசிகர்கள் பெருமிதத்துடன் அனுபவித்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வரும் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சிறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பாராட்டு உரை நிகழ்த்த உள்ளனர்.

தனது மக்களும் சிம்பொனி இசையை கேட்க வேண்டும் என இளையராஜா முன்பே தெரிவித்திருந்தார். அதற்கமைய, இந்த பாராட்டு விழாவில் தனது இசைக்குழுவுடன் சிம்பொனி இசையை நேரடியாக அரங்கேற்ற உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து வரும் பின், விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version