சென்னை : இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவைத் தாண்டி, இந்திய திரைப்பட இசையில் தனித்துவம் கொண்ட ஆளுமையாக திகழும் இளையராஜா, 82 வயதிலும் இசையமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆயிரக்கணக்கான பாடல்கள், சிம்பொனி இசை நிகழ்ச்சிகள் என உலகம் முழுவதும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த விழா தள்ளிப் போனது. இன்று, அந்த விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கிய ‘மடை திறந்து பாயும் நதியலை நான்’ என்ற பாடலை எஸ்பிபி சரண் பாடினார். மேலும், ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடலை அவர் பாடியபோது ரசிகர்கள் உற்சாகக் குரலில் கைத்தட்டினர்.
இளையராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
