“கமலின் சங்கை அறுப்பேன்” என மிரட்டல் விடுத்த நடிகருக்கு முன்ஜாமீன் !

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அகரம் பவுண்டேஷன் 20ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நீட் தேர்வு குறித்து பேசும் போது “கல்வி என்ற ஆயுதம் சனாதன சங்கிலிகளை உடைக்கும் சக்தி கொண்டது” என கூறியிருந்தார்.

இந்த உரை சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் நடிகர் ரவிச்சந்திரன், யூடியூப் பேட்டியொன்றில் “சனாதனம் பற்றி பேசும் கமலின் சங்கை அறுப்பேன்” எனக் கூறி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். கட்சியின் துணைத் தலைவர் மவுரியா உள்ளிட்டோர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இந்தச் சூழலில், முன்ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “எந்தவித நோக்கமுமின்றி தவறுதலாக கூறிய கருத்து அது” என்று அவர் மனுவில் விளக்கம் அளித்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பின் எதிர்ப்பைக் கேட்டுப் பார்த்து, ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Exit mobile version