இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றில், “மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் – காளமாடன்’ திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உணர்வுகளுடன் நிறைந்த அற்புதமான படம் இது. ஒரு கிராமத்து இளைஞன் தனது கனவை அடைய எதிர்கொள்ளும் சவால்கள், சமூக தடைகள் அனைத்தையும் நிஜத்தோடு சேர்த்து திரையில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் எனது வாழ்க்கையையே காண முடிந்தது,” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மிக நம்பிக்கையுடன் சொல்லியுள்ளார் மாரி செல்வராஜ். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் அவரது எண்ணம் அனைவரையும் தொடுகிறது. கதாநாயகன் துருவ் தன்னையே முழுமையாக அர்ப்பணித்து நடித்துள்ளார். பசுபதி, லால் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் சிறந்த நடிப்பால் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். மாரி செல்வராஜ் மேலும் பல சிறந்த படங்களை இயக்கி, சமூகம் சார்ந்த தனது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்,” எனவும் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.

















