பஞ்சாக்கை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்ட போது பூ வியாபாரி மீது கார் மோதி விபத்து. ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவுற்ற நிலையில், அச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு அங்கு எந்த தடுப்புகளும் அமைக்கப்படாமல் உள்ள நிலையில், பஞ்சாக்கை கிராமத்தில் இருந்து ஆக்கூர் முக்கூட்டு செல்வதற்காக அச்சாலையை கடக்க முயன்ற கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்த பூ வியாபாரி பழனிவேல் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்தினால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்னும் சாலை திறக்கப்படாத நிலையில் தினந்தோறும் அதிக விபத்துக்கள் ஏற்படுவதால், அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் டிவைடர்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
