‘அம்பிகாபதி’ பட AI கிளைமேக்ஸ் மாற்றம் : “படத்தின் ஆன்மாவை கொன்றுவிட்டனர் !” – நடிகர் தனுஷ் கண்டனம்

2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘ராஞ்சனா’ படம், தமிழில் ‘அம்பிகாபதி’ என பெயர் மாற்றப்பட்டு வெளியானது. நடிகர் தனுஷ் நடித்து, ஆனந்த் எல். ராய் இயக்கிய இப்படம் இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், புதிய தலைமுறையினரைக் கவரும் நோக்கில், இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்தது.

முந்தைய பதிப்பில், கதாநாயகன் இறந்துவிடும் காட்சியே முக்கியமாக இருந்தது. ஆனால் புதிய பதிப்பில், தனுஷ் உயிருடன் மீண்டும் திரும்புவது போல கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் ஆனந்த் எல். ராய், “இது படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது. படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என கண்டனம் தெரிவித்தார்.

இதேபோல், நடிகர் தனுஷும் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். மாற்றப்பட்ட காட்சிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இது படம் எந்த உந்துதலோடு உருவாக்கப்பட்டது என்பதைக் குறைக்கும் செயல். 12 ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டது இதற்காக அல்ல. படத்தின் ஆன்மாவையே கொன்று விட்டனர். சினிமா மரபுக்கே இது ஒரு அச்சுறுத்தல். எதிர்காலத்தில் இதுபோன்ற செயலைத் தடுக்க சட்டவிதிமுறைகள் அமைய வேண்டும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம்,

“இது ஒரு புதிய பதிப்பு. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சில அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மூலக் காட்சிகளை முற்றிலும் மாற்றவில்லை. இது ஒரே நேரத்தில் புதிய பார்வையாளர்களையும், படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் முயற்சியாகும்” என விளக்கம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த மாற்றம் ரசிகர்கள், சினிமா வட்டாரங்களில் பெரிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

Exit mobile version