தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அமமுக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது. அதேபோல், பன்னீர்செல்வம் தலைமையிலான ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’வும் பாஜக கூட்டணியில் இணைந்தது. ஆனால் தற்போது, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதியான நிலையில், பழனிசாமியின் ஆதிக்கத்தால் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் புறக்கணிக்கப்பட்ட நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில், 2026 தேர்தலை முன்னிட்டு தன் அணி நிலையைத் தக்கவைத்துக்கொள்ள பன்னீர்செல்வம் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரையில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்த அவர், அதை ஒத்திவைத்து, தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக தவெக (தமிழக வெற்றி கழகம்) கூட்டணியை சுட்டிக்காட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்ற பன்னீர்செல்வத்தின் பதில், விஜய் பக்கம் நகரும் சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
இதேபோல், முன்னதாகவே டிடிவி தினகரனும், “விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு உண்டு; டிசம்பரில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனக் கூறியிருந்தார். இதனால் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் தரப்புகள், தவெக பக்கம் நகரும் சாத்தியம் குறித்து பல்வேறு அரசியல் கணக்குகள் எழுந்துள்ளன.
தென் தமிழகத்தில் இன்னும் செல்வாக்கு பெற்றிருக்கும் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் விஜய் கூட்டணியில் சேர்ந்தால், பாஜக பாதிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதேபோல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துகளும் இதையே உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை பன்னீர்செல்வம், தினகரன் தரப்புகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், விஜய் மேற்கொள்ள உள்ள மாநில சுற்றுப்பயணத்திற்கு முன்பே அதற்கான முன் வேலைகள் தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.