கரூரில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவைப்படுவதாக தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்குப் பிற்பாடு மருத்துவமனைகள் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தது திட்டமிட்ட சதியைக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவெக சட்டப்பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவில், பரப்புரையின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசிய தருணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பின்னர் கற்கள் மற்றும் செருப்புகள் எறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்த தவெக, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த மனுக்கள் அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
