கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-
கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்;ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ துறையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படும் கொள்ளிடம் மருந்தாளுநர்; சிவகாமசுந்தரி மற்றும் திருமுல்லைவாசல் மருந்தாளுநர் சுரேந்தர்நாத் ஜவகர் ஆகியோர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மருந்தாளுநர்; சிவகாமசுந்தரி, கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள் மீது பாலியல் தொடர்பான பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பொதுவெளியில் கூறுவதைக் கண்டித்தும், கொள்ளிடம் வட்டார அனைத்து அலுவலர்களையும் தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் அச்சுறுத்துவதைக் கண்டித்தும், பொது சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தினை தொடர்ந்து விமர்சித்து வருவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் சுந்தர்ராஜன், கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத் தலைவர் இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருதவாணன் (மயிலாடுதுறை), அருண்ராஜ்குமார் (சீர்காழி) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், ஆய்வக நுட்புநர் சங்கம், அனைத்து மருத்துவ பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட மருத்துவத்துறை தொடர்புடைய அனைத்துத் துறை சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
