‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிக்கும் 64வது திரைப்படத்தை (AK64) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வலம்வந்தன. தற்போது இந்த தகவலைத் தானே உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இத்திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களம் அல்லாது, முற்றிலும் புதிய வகை கொண்டதாக இருக்கும் என்றும், ரசிகர்களின் மனதை கவரும் ஒரு வித்தியாசமான படமாக உருவாகும் என ஆதிக் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படக்குழுவில் பணியாற்றிய சிலர் இந்தப் புதிய படத்திலும் இணைகின்றனர். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாரும், சண்டை இயக்குநராக சுப்ரிம் சுந்தரும் பணியாற்றவுள்ளனர்.
நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் இருவரின் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
