திருவாரூரில் தமிழ்த்தென்றல் திருவிக சிலைக்கு மாலை அணிவித்த பின் பேரணியாக சென்று வேட்பு மனு

திருவாரூரில் தமிழ்த்தென்றல் திருவிக சிலைக்கு மாலை அணிவித்த பின் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஸ்வினி, திமுக கோட்டையை நாம் தமிழர் கோட்டையாக மாற்றுவேன் என உறுதி அளித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. ஏப்ரல் 23 ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற ஆறாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அஸ்வினி, திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் கட்சி சின்னமான ஏர்கலப்பையை கையில் ஏந்தி ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டனர். தொடர்ந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தமிழ்த்தென்றல் திருவிக திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியர் சத்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஸ்வினி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது…

இலவசங்களுக்கு மாறாக தான் நாங்கள் இருக்கிறோம். உறுதியாக இலவசமான கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற முழுமையான கோட்பாடுடன் இருக்கிறோம். மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், வேலை இல்லாத ஆண்களுக்கு 4000 ரூபாய், என்கிற எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்க முடியாது. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு இளம் வேட்பாளராக களம் இறங்குவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இன்று திருவாரூர் என்பது ஒரு திராவிட கோட்டை, திமுக கோட்டை என்பதை முற்றிலும் முழுதுமாக உடைத்தெறிந்து 2026 ஆம் ஆண்டு நாம் தமிழரின் கோட்டையாக உறுதியாக மாற்றுவோம் என்பதை வாக்குறுதியாக கொடுக்கிறேன் என்று கூறினார்.

*வழக்கமாக வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கமாக இருந்த நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் தமிழ்த்தென்றல் திருவிக சிலையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த் தென்றல் திருவிக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்தது பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version