மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி காப்பாளராக பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 10-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், விடுதி மாணவர்களுக்காக கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்து, தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு பணிசுமையால் தற்கொலை செய்து கொண்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன் – கலையரசி தம்பதியினர். ஆசிரியர்கள்களான இவர்கள் இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒருவயதில் மகள் உள்ளார். இடைநிலை ஆசிரியரான மகேந்திரன் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளின்; காப்பாளராகவும், கலையரசி பண்டாரவாடை அரசு துவக்கப்பள்ளி ஆசிரியராகவும் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி மகேந்திரன் அவரது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, மகேந்திரனின் தாய் சரோஜா அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட பெரம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததால் ஒரு வாரத்திற்கு முன்பு மகளை அழைத்துக் கொண்டு கலையரசி அவர்; பிறந்த ஊரான மணக்குடிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கலையரசி பணியாற்றும் பள்ளிக்குச் சென்ற மகேந்திரன் சமாதானம் பேசி மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது பின்னர் வருகிறேன் என்று மனைவி கூறியதால் மனமுடைந்த மகேந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வயதான தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் கோரிக்கை வைத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும் பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு காப்பாளர் பணிசுமையால் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆசிரியர் மகேந்திரன் விடுதி காப்பாளராக பணியில் சேர்ந்ததில் இருந்து டிச.8-ஆம் தேதிதான் மாணவர்களின் உணவுப்படி பில்லினை வழங்கியதாகவும், மாணவர்களுக்கு உணவு வழங்கியதால் கடன்சுமை ஏற்படவில்லை, குடும்ப பிரச்னை காரணமாகவே ஆசிரியர் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
