சென்னை: கரூர் விஜய் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, X தளத்தில் பதிவிட்டிருந்த கருத்துக்கு எதிராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவான நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி அதிகாலை ஆதவ் அர்ஜுனா போட்டிருந்த பதிவு GenZ இளைஞர்களை தூண்டும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, “ஆதவ் அர்ஜுனா அரசியலில் புதியவர்; அவருடைய சமூக தாக்கம் குறைந்தது. எனவே, அவர் போட்ட பதிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: “அரசியலமைப்பு 19(1)(அ) பிரிவின் கீழ் கருத்து தெரிவிக்கும் உரிமை ஒரு அடிப்படை உரிமை. ஆனால் பொது ஒழுங்கு, நாட்டின் ஒருமைப்பாடு, கண்ணியம், ஒழுக்கம் ஆகிய காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பதிவு வன்முறையையோ அல்லது கலவரத்தையோ தூண்டுமாறு இல்லை. அது அதிகாலை நேரத்தில் குறுகிய மக்களால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது” என நீதிமன்றம் விளக்கியது.
மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்த எஸ்.வி. சேகர் வழக்கை குறிப்பிட்டு, “அவரைப்போல சமூக தாக்கம் ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை” என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த அடிப்படையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுவித்தது.
