நடிகர் மற்றும் ரேஸர் அஜித் குமார், தனது சமீபத்திய திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ வெளியான பிறகு, மீண்டும் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு முக்கியமான நிகழ்வாக, அவர் சமீபத்தில் Mercedes-AMG GT3 ரேஸிங் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் ரூ.10 கோடி ஆகும். புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை அஜித் தனது ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்ததுடன், அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதே வேளையில், ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் சமீபத்திய தோற்றமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரை மீண்டும் ‘ஆலுமா டோலுமா’ லுக்கில் காண்கிறோம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘F1’ திரைப்படம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் குமார் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ரேஸிங் நிகழ்வில் கலந்து கொண்டபோது, ஒரு தொகுப்பாளர் அவரிடம்,
“பிராட் பிட் F1 படத்தில் நடித்துள்ளார். அதைப் போலவே, இந்தியா சார்ந்த 24H Race படம் போன்ற ஒன்றில் நீங்கள் நடிப்பீர்களா?” எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அஜித்,
“ஏன்? நானே ‘Fast & Furious’ தொடரின் அடுத்த பாகம் அல்லது ‘F1’ திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கக்கூடாது? எனது படங்களில் நான் எனக்கான ஸ்டண்டுகளைத் தானே செய்து வருகிறேன். அதேபோன்று, நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், அதில் நிச்சயம் நடிப்பேன்” என தெரிவித்தார்.