தவெக தலைமை அறிவுறுத்தலின் பேரில் திருத்தணியில் தவெக வேட்பாளர் சத்திய குமார் நிர்வாகிகளுடன் வீடு வீடாகவும், கடை கடையாகவும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்களை விசில் ஊத செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார் போட்டியிடுவார் என அறிவித்ததையடுத்து சத்தியகுமார் நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் வராத நிலையில் நேற்று சத்தியகுமார் திருத்தணி நகரம் முழுவதும் தனி ஒருவராக பிரச்சாரம் செய்வதை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பியதையடுத்து தலைமை அறிவுறுத்தலின் பேரில் இன்று நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு திருத்தணி பேருந்து நிலையம், பகுதியில் கூழ் குடித்தும் டிபன் கடையில் டிபன் வியாபாரம் செய்தும் மார்க்கெட், கமலா திரையரங்கம் அருகில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்களிடம் விசிலை கொடுத்து ஊத சொல்லியும், ஆண்களுக்கு கையில் அன்பு முத்தம் கொடுத்தும் முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

















