ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அச்சமும் அதிகரித்துள்ளது. பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளையும், ஏராளமான குறுகிய சந்துப் பகுதிகளையும் கொண்ட ஒரு நெரிசலான நகராகும். இங்குள்ள ராமநாதபுரம் நெடுஞ்சாலை, காந்தி சிலை சந்திப்பு, காந்திஜி ரோடு, ஆற்றுப்பாலம், ஓட்ட பாலம் மற்றும் தரைப்பாலம் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வரிசையாகப் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இத்தகைய பிளக்ஸ் போர்டுகள் சாலை வளைவுகளிலும், சந்திப்புகளிலும் உயரமாகவும், நீளமாகவும் வைக்கப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களின் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இதனால் நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கிப் பலத்த காயமடையும் சூழல் நிலவுகிறது. ‘தினமலர்’ நாளிதழ் இது குறித்துத் தொடர்ந்து சுட்டிக்காட்டும் போது மட்டும் பெயரளவிற்குப் போர்டுகள் அகற்றப்படுகின்றன. ஆனால், பிளக்ஸ் போர்டுகளை வைப்பதற்கு என நகராட்சி நிர்வாகம் முறையான இடங்களை ஒதுக்காததாலும், விதிமீறல்களைக் கண்டுகொள்ளாததாலும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
குறிப்பாக, ஏதேனும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடக்கும்போது, நிகழ்வு முடிந்து பல நாட்களாகியும் அந்தப் போர்டுகளை அகற்றாமல் மாதக்கணக்கில் அப்படியே விட்டுச் செல்வது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக உள்ளது. கடந்த மாதம் நெடுஞ்சாலைத் துறையினர் சில போர்டுகளை அகற்றினாலும், தற்போது மீண்டும் அதே பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் போர்டுகளை வைப்பவர்கள் மீது கடும் அபராதம் விதிப்பதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
















