கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய யானைகள் முகாம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. யானைகளின் வாழ்வியல் முறை மற்றும் அவற்றின் உடல் நலனைப் பேணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில், யானைகளுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை வழங்க உயர்நிலைத் தொட்டியும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதற்கான பிரத்யேகக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முரட்டுத்தனமாக நடக்கும் யானைகளைக் கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் 2 ‘கரால்’ (யானைக்கூண்டு) வசதிகளும், யானைகளின் உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிக்க வைப்பதற்காக 5 அதிநவீன ஷவர் (Shower) வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யானைகள் தங்குவதற்காக 18 புதிய ஷெட்கள் (Sheds) பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், யானைகளின் சாணத்தைக் கழிவாக வீசாமல், அதனைச் சேகரித்து மண்புழு உரம் தயாரிப்பதற்கான பிரத்யேகக் கிடங்கு ஒன்றும் ஷெட்களின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, யானைகள் உற்சாகமாக விளையாட நீச்சல் குளம், 3 சிறிய அளவிலான நீர் குட்டைகள் மற்றும் யானைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை அங்கேயே விளைவிப்பதற்கான தீவனப் பயிரிடும் நிலம் ஆகியவையும் முகாம் வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, 40 சோலார் விளக்குகள் மற்றும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காட்டு யானைகள் முகாமிற்குள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், முகாம் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முகாமைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் மற்றும் சோலார் மின்வேலிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த முகாம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது குறித்து வனத்துறையினர் கூறுகையில், திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருந்து யானைகளை இங்கு அழைத்து வருவதற்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்தவுடன், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் யானைகள் சாடிவயல் முகாமிற்குக் கொண்டு வரப்படும். மேலும், மனித – வனவிலங்கு மோதல்களைத் தவிர்க்கவும், காட்டு யானைகளை விரட்டும் பணிகளுக்காகவும் இம்முகாமில் நிரந்தரமாகக் கும்கி யானைகளை நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நவீன முகாம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம், கோயம்புத்தூர் மண்டலத்தில் யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















