சென்னை: இன்று பௌர்ணமி இரவு வானத்தை நோக்கி பாருங்கள் — கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே காணப்படும் அரிய காட்சி இது! வழக்கத்தைவிட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் நிலவை வானியல் நிபுணர்கள் ‘பீவர் சூப்பர் மூன்’ என்று அழைக்கின்றனர்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டில்தான் இந்நிலவு தோன்றியது. அதன்பின், இன்று மீண்டும் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் நிலவு வந்து சேருவதால், இதை ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. வானியல் கணக்குகளின்படி, நிலவு வழக்கத்தை விட சுமார் 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் தெரியும்.
இந்த அரிய நிகழ்வை இந்தியாவிலிருந்தே காண முடியும். வானம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால், மாலை 6.49 மணி அளவில் நிலவு தனது அதிகபட்ச பிரகாசத்தை அடையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த வாய்ப்பு
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ஒளி மாசு அதிகம் இருப்பதால், நிலவை தெளிவாக காண விரும்புவோர் நகர புறப்பகுதிகளைத் தேர்வு செய்யலாம். சென்னை வாசிகள், வாணியம்பாடி அருகே உள்ள வைனு பப்பு கோள் ஆய்வகப் பகுதிக்கு சென்றால் மிகத் தெளிவான காட்சியை அனுபவிக்கலாம்.
இயற்கையில் சிறிய மாற்றங்கள்
பௌர்ணமி இரவில் சில இரவு நேர விலங்குகளின் நடத்தையில் மெல்லிய மாற்றங்கள் ஏற்படும். ஆந்தைகள் போன்ற வேட்டையாடிகள் அதிகம் தென்படலாம்; எலிகள் போன்ற சிறிய உயிரினங்கள் பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வது வழக்கம். கடல்வாழ் உயிரினங்களிலும் இதேபோல் சற்று மாறுபாடுகள் காணப்படும். ஆனால் மனிதர்களின் உடல், மனநிலையில் எந்தவித அசாதாரண மாற்றங்களும் ஏற்படாது என நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

















