மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணி ஆகியவை இணைந்து, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணியை நடத்தின. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணி வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் சீருடையுடன், கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். இப்போருணி மூலம் “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்ற செய்தியை பொதுமக்களுக்குக் கொண்டு செல்வதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக அமைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எஸ். வனிதா அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவின் போது பேசிய அதிகாரிகள், இருசக்கர வாகன விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் தலைக்காயங்களாலேயே நிகழ்கின்றன என்றும், சட்டத்திற்காக அன்றித் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு வாகன ஓட்டியும் தலைக்கவசம் அணிவதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ரிசர்வ் லைன் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, மாநகரின் முக்கியப் பகுதிகளான ஆத்திகுளம், நாராயணபுரம், ஐயர் பங்களா வழியாகச் சென்று யாதவா பெண்கள் கல்லூரியை அடைந்தது. பின்னர் மீண்டும் அதே வழியே பயணித்து ரிசர்வ் லைன் வளாகத்திலேயே நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில் தமிழ்நாடு காவல் சிறப்பு படை ஆறாம் அணியின் தளவாய் ஆனந்தன், துணை தளவாய் தாமஸ், உதவி தளவாய்கள் சுந்தர ஜெயராஜ், மான் சிங் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் காவல்துறையினர் விழிப்புணர்வு பதாகைகளைத் தாங்கியபடி சென்றது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. சாலை விதிகளை மதிப்பதிலும், தலைக்கவசம் அணிவதிலும் காவல்துறையினரே முன்மாதிரியாகத் திகழ்ந்து இப்போராணியை நடத்தியது மதுரையின் பல்வேறு தரப்பு மக்களிடமும் பாராட்டைப் பெற்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை போன்ற மாநகரங்களில் விபத்துகளைக் குறைப்பதற்கான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

















