பிரபல சமையல் கலை நிபுணரும், ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் வெளியாகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதே நேரத்தில், ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இருக்கின்ற நிலையில், ஆறு மாத கர்ப்பிணியான ஜாயை திருமணம் செய்தாரா என கேள்விகள் எழுந்தன. இதன் பின்னணியில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சில பயணங்கள் அமைதியாக ஆரம்பிக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் எங்களது பயணம் கணவன் மனைவியாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரஸ்பர அன்புடனும், கண்ணியத்துடனும், முழு மனதுடனும் மரியாதையுடனும் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு எங்களது குழந்தையை மிகுந்த நன்றி உணர்வுடன் அமைதி மற்றும் அன்புடன் வரவேற்க தயாராகி உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
2019-ல் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானவர். மேலும், பல சுப நிகழ்ச்சிகளில் இவரது சமையல் குழு சேவையளித்து வருகிறது.
இந்நிலையில், ஜாயுடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படம் வெளியானதும், இருவரும் காதல் வாழ்கையில் இருக்கின்றனர் என பேச்சுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் திருமண புகைப்படம் வெளியாகியதும், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது, ஜாய் கிரிசில்டாவின் விளக்கம் மூலம், இருவரும் நீண்டகாலமாக உறவில் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இன்னும் எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.