புதுக்கோட்டை மாவட்டம் கூடல்நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் திருமயம் ஒன்றியம் திருவானைக்காவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை இணைந்து, ‘தேசிய அறிவியல் தின விழா – 2026’ நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தின. அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவ்விழாவிற்கு, பட்டதாரி ஆசிரியர் எஸ்.முத்துலெட்சுமி தலைமை தாங்கி, அறிவியல் தீபத்தை ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் பா.விஜயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி. புவனேஸ்வரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வி வி.பிரியதர்ஷிணி ஆகியோர், ‘அறிவியலில் பெண்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் எழுச்சியுரை ஆற்றினர்.
அவர்கள் பேசுகையில், மேரி கியூரி முதல் இந்தியாவின் விண்வெளி நாயகி கல்பனா சாவ்லா வரை பெண்கள் நிகழ்த்திய சாதனைகளைச் சுட்டிக்காட்டினர். இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்களில் பெண் விஞ்ஞானிகளின் உழைப்பையும், நாட்டின் பாதுகாப்புத்துறையில் ‘மிசைல் வுமன்’ எனப் போற்றப்படும் டெஸ்ஸி தோமஸின் ஏவுகணைத் தொழில்நுட்பப் பங்களிப்பையும் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். ஆய்வகங்களில் தொடங்கிய பெண்களின் பயணம் இன்று ஆகாயம் வரை விரிந்திருப்பது சமத்துவ சமூகத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்ட அவர்கள், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக்கும் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வையின் முக்கியத்துவத்தையும் விளக்கினர். உள்கட்டமைப்பு, டிஜிட்டல் சேவை, பசுமை ஆற்றல் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியா உறுதியுடன் முன்னேறி வருவதாக அவர்கள் எடுத்துரைத்தனர்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக, தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக இயக்குநர் டாக்டர் ச.விஜிக்குமார் தேசிய அறிவியல் தின சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வான் தொலைநோக்கி (Telescope) வழியாக நட்சத்திரங்களை உற்று நோக்குவது குறித்தும், அதிநவீன நுண்ணோக்கிகளை (Microscope) முறையாகக் கையாளும் விதம் குறித்தும் நேரடிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் ஓரிகாமி கலை மூலம் வண்ணக் காகிதங்களில் பல்வேறு அறிவியல் வடிவங்களைச் செய்து காட்டி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிர்வாக அலுவலர் சி.கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைக்க, இடைநிலை ஆசிரியர் ப.சுகந்தி நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் அமைந்த இந்த விழா, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
















