நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரி மொராஹட்டி கிராமத்தில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தையும், அரிய வகை கருஞ்சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இரு வேறு சிறுத்தை இனங்கள் குடியிருப்புப் பகுதியின் நடுரோட்டில் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு பொதுமக்களை உறைய வைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, இக்கிராமத்தின் பிரதானச் சாலைக்கு வந்த இந்த இரு சிறுத்தைகளும் ஒன்றையொன்று தாக்கிப் பயங்கரமாகச் சண்டையிட்டுள்ளன.
அந்தச் சமயம் அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றின் முன்பே, நீண்ட நேரமாக இந்த மோதல் நீடித்துள்ளது. வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் ஆக்ரோஷமாகச் சண்டையிட்ட சிறுத்தைகள், பின்னர் அங்கிருந்த தடுப்புச் சுவரின் மீது ஏறி அடர்ந்த புதருக்குள் மறைந்தன. இந்தச் சண்டைக் காட்சிகள் வாகனத்தில் இருந்தவர்களின் அலைபேசியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக வனப்பகுதியில் எல்லைப் பிரச்சினை காரணமாகச் சிறுத்தைகள் மோதிக்கொள்வது வழக்கம் என்றாலும், மக்கள் வசிக்கும் பகுதியில் இத்தகைய மோதல் நடைபெற்றது பாதுகாப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கரி மொராஹட்டி கிராமத்தில் உள்ளூர் திருவிழாக் காலம் என்பதால், இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு நள்ளிரவு வரை வீதி உலாவரும் சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், ஊருக்குள்ளேயே இரு சிறுத்தைகள் சுற்றித் திரிவதும், அவை ஒன்றையொன்று தாக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக இருப்பதும் எந்நேரமும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் இரவு நேரக் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் கூண்டு வைத்துச் சிறுத்தைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் கிராம மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
