தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்றன. கடந்த ஆண்டு வெளியாகிய அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசை வழங்கி, மேலும் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
இந்நிலையில், வெறும் மூன்று தனிப்பட்ட (இண்டிபெண்டண்ட்) பாடல்களை மட்டுமே வெளியிட்டிருக்கும் சாய் அபயங்கரிடம் தற்போது எட்டு பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பட்டியலில் சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கும்.
ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில், சாய் அபயங்கர் இவ்வளவு படங்களில் எப்படி கமிட் ஆனார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது. சிலர், இவர் பிரபல பாடகர்களின் மகன் என்பதால்தான் இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்துள்ளன என விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், சாம் சிஎஸ் பதிலளித்துள்ளார்.
சாய் திறமையுள்ள இசையமைப்பாளர் என்பதை நான் நன்கு அறிவேன். அவரை தேர்ந்தெடுத்த இயக்குநர்களும் அவ்வாறு எண்ணுகிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு அவரது திறமை தெரியாது, ஏனெனில் அவர் பணியாற்றிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் மிகுந்த திறமை கொண்டவர். ஏராளமான பாடல்களை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளார். இயக்குநர்கள் அவருடைய வேலைகளைக் கேட்டு கமிட் செய்கிறார்கள். சாய் எந்தவித பிஆர் வேலைகளும் செய்து வருவதில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே வெளியான நிலையில், இவ்வளவு வாய்ப்பு எப்படி என மக்கள் கேட்கிறார்கள்,” என்று கூறினார் சாம்.
மேலும், “சாய் அபயங்கரை பற்றிய புகழ்ச்சியான பதிவு ஒன்றை நான் செய்தேன், அது எனது பிஆர் வேலைக்காகத்தான் என்றும், சாய் படம் பெறுவதைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன் என்றும் ஒருவர் கூறினார். நிச்சயமாக, அந்த பதிவை நானே செய்தேன் என யாராவது ஆதாரத்துடன் நிரூபித்தால், சினிமாவிலிருந்து நான் விலக தயார்.
சாய்க்கு வாய்ப்பு கிடைப்பது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு அப்படி தோன்றுவதில்லை. நான் செய்கிற வேலைகளில் நான் மிகவும் திருப்தியடைகிறேன்,” என்றும் அவர் கூறினார்.