பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, ‘டிரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் கீழ் ‘சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். கடந்த மே 9ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளங்களில் வெளியாகிய பிறகு மேலும் பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதில், சமந்தா கேமியோ வேடத்தில் நடித்ததும் சிறப்பம்சமாகும்.
இந்நிலையில், சமந்தா இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்த புதிய திரைப்படத்தை ‘ஓ பேபி’ படத்தின் இயக்குனரான நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவைத் தவிர, சமந்தா தொடர்ந்து இந்தி திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்துவருகிறார். குறிப்பாக, ‘தி ஃபேமிலி மான்’ சீசன் 2, ‘சிட்டாடெல்’, ‘ஹனி பனி’ போன்ற வெற்றிப் பெறுமான தொடர்களில் கலக்கினார். தற்போது, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ‘ரக்த் பிரமந்த்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.