ஆட்டோவில் எளிமையாக வந்து நாகூர் ஆண்டவரை வழிபட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் – 470-வது கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் வைபவம் கோலாகலம்
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மிகவும் எளிமையாக ஆட்டோவில் வந்து பங்கேற்று வழிபட்டார். அவரைக் காணவும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் முண்டியடித்ததால் தர்கா வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறது.
இந்த தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தர்காவில் நாள்தோறும் சிறப்புத் தொழுகைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்று வழிபட்டனர்.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, நாகையிலிருந்து மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது.
நாகை மற்றும் நாகூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு, வழிநெடுகிலும் இருபுறங்களிலும் திரண்டிருந்த இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சந்தனக்கூடு நாகூர் தர்காவை வந்தடைந்தது. அங்கு சிறப்புத் துவா ஓதப்பட்டு, பாரம்பரிய முறைப்படி நாகூர் பெரிய ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மிகவும் எளிமையான முறையில் ஆட்டோவில் நாகூர் தர்காவிற்கு வருகை தந்தார்.
தர்காவின் கால் மாட்டு வாசல் வழியாக உள்ளே சென்ற அவர், நாகூர் பெரிய ஆண்டவர் சமாதியில் நடைபெற்ற சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து சுமார் ஐந்து நிமிடங்கள் தர்காவின் உள்ளே தரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட அவர், தனது பிரார்த்தனையை நிறைவு செய்துவிட்டு எவ்வித ஆடம்பரமும் இன்றி மீண்டும் ஆட்டோவிலேயே ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து, ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்தனர். செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் போட்டி போட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து நாகூர் ஆண்டவரை வழிபட்டு வருகின்றனர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெறும் இவ்விழாவில் மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றிருப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்படும் சந்தனம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் பாலசுப்பிரமணிய பாலச்சந்தர் தலைமையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகம், பாரம்பரியம், மத நல்லிணக்கம் என முப்பெரும் சிறப்புகளுடன் நடைபெற்றுவரும் நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.







