கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்!
இரு கைகள், முகம் மற்றும் தலையில் 25 சதவீத தீக்காயம் – தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சென்னை கொரட்டூர் சாவடி தெருவில், கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கேபிள் டிவி ஆபரேட்டர் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
திருமுல்லைவாயல், கணபதி தெருவைச் சேர்ந்த முனிசந்திரன் என்பவரின் மகன் செந்தில்குமார் (44). இவர் பாலாஜி நெட்வொர்க் கேபிள் டிவி நிறுவனத்தில் ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கொரட்டூர் சாவடி தெருவில் துரைசாமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில் ஏறி கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி அவர் மீது பட்டதில் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார்.
இதில், செந்தில்குமாரின் இரு கைகள், முகம் மற்றும் தலையில் சுமார் 25 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தின்போது வின்னவன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மின்சார இணைப்புகள் மற்றும் மின்னணு சாதனங்களும் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த கேபிள் டிவி நிறுவன உரிமையாளர் காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு கோயம்பேட்டில் உள்ள பீ வெல் (Bee Well) தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொரட்டூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.







