வேலூரில் விஜிலன்ஸ் சார்பில் லஞ்சத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி, லஞ்சம் வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம்!
ஊழலை ஒழிக்க பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் – லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள் மீது புகார் அளிக்கலாம்!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் ஆபீஸ் லைன், சாலையில், வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் லஞ்சத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வேலூர் மாவட்ட டி.எஸ்.பி, விஜிலென்ஸ் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெ.ராஜூ தலைமையிலும், விஜிலென்ஸ் காவல் ஆய்வாளர் ஜி.மைதிலி முன்னிலையிலும், நடைபெற்றது.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பது ஊழல். இதனை முற்றிலும் ஒழிக்க அரசு அலுவலர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காகச் செல்லும்போது முறையாக மனு அளித்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கான கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், உரிய கட்டணத்தைச் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் குறுக்கு வழியில் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்வதற்காக லஞ்சமாகப் பணம் கொடுப்பதும் குற்றமாகும்.
அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதால், லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல், அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளிக்கலாம். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடம் பணமாகவோ, பொருளாகவோ நேரடியாக லஞ்சம் கேட்டாலோ அல்லது மறைமுகமாக இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கேட்டாலோ தயங்காமல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், அரசு அலுவலர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்து வைத்திருப்பது தெரியவந்தாலும், அது குறித்த விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினருக்குத் தெரிவித்து புகார் அளிக்கலாம்.
எனவே, ஊழலற்ற நிர்வாகம் அமையவும், நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் முற்றிலும் தவிர்த்து ஊழலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள், மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி, இந்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.







