காமராஜர் குறித்து அவதூறு: தோழர் தியாகு மீது போலீசில் புகார்
ஓட்டுக்குப் பணம் கொடுத்தார் என முகநூலில் பதிவு: காமராஜர் தேசிய காங்கிரஸ் கண்டனம்
அறவழியில் போராடும் மக்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்களா என ஆவடி காவல் ஆணையரிடம் கேள்வி
கீழ்த்தரமாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் தோழர் தியாகு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் காமராஜர் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.முரளி என்பவர் ஆவடி காவல் ஆணையரிடம் அக்டோபர் 28-ஆம் தேதி அளித்துள்ள புகார் மனுவில், அப்பழுக்கற்ற அரசியல் தலைவரான காமராஜர் குடியாத்தம் மற்றும் காஞ்சிபுரம் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார் எனத் தோழர் தியாகு தனது முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் (Reels) ஒன்றைப் பதிவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். பெருந்தலைவர் மீது இவ்வாறு சேற்றை வாரி இறைத்துள்ள அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், காமராஜரைத் தரம் தாழ்ந்து விமர்சித்து எளிதாகப் பிரபலம் தேடும் முயற்சியில் கருணாநிதி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, அர்ஜுன் சம்பத், யூடியூபர் முக்தார், டாக்டர் காந்தராஜ் ஆகியோரின் வரிசையில் தற்போது தோழர் தியாகுவும் இணைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர் குறித்து விமர்சித்ததற்காகச் செந்தில் மள்ளருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நாடார் சமுதாய மக்கள் மட்டுமே அறவழியில் சட்டத்தின் மூலம் அமைதியாகப் போராடி வருவதாகவும், அவர்களை எப்படியாவது வன்முறையில் ஈடுபட வைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய அவதூறு விமர்சனங்கள், இளைஞர்கள் காமராஜர் மாடலைப் பின்பற்றித் தூய்மையான அரசியலில் ஈடுபடுவதைத் தடுத்து, கருணாநிதி மாடலைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருங்கால இளைஞர்கள் தூய்மையான அரசியலில் ஈடுபட வசதியாக, காமராஜரைக் கீழ்த்தரமாகப் பேசுபவர்கள் மீது தமிழ்நாடு அரசும் காவல்துறையும் உரிய வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.







