சிறிய மழைக்கே சிதிலமடைந்த நாகை நகர சாலைகள்: போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், சிறிய மழைக்கே நகரத்தின் முக்கியச் சாலைகள் கடுமையான சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் ஒருபுறம் அனல் காற்றுடன் கடுமையான வெயில் நிலவி வந்தாலும், மற்றொருபுறம் பருவமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்நிலையில், மழை தொடங்கிய சில நாட்களிலேயே நாகை நகரின் பிரதான சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. குறிப்பாக, அந்தோணியார் கோவில் மெயின் ரோடு முற்றிலும் பாழடைந்து காணப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ-மாணவியர், பணிக்குச் செல்வோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல், நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் கடற்கரை சாலையும் மக்கள் நடக்கவே முடியாத அளவிற்குச் சிதிலமடைந்துள்ளது. பழைய கடற்கரை மற்றும் மீன்பிடித் துறைமுகத்திற்குச் செல்வதற்கும், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதற்கும் இந்தச் சாலையே பிரதான வழியாக உள்ளது.
தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் விபத்து அபாயத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிறிய மழைக்கே சாலைகள் இந்த அளவிற்குச் சிதைந்துவிட்டால், பெருமழை பெய்தால் சாலைகளே காணாமல் போய்விடும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, விபத்துகள் நேரிடும் முன் மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து, போர்க்கால அடிப்படையில் நாகை நகரச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















