மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு. நெல்மூட்டைகள் மழையில் நனைந்திருந்ததைப் பார்த்து நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதாக பெருமையாம நாம் பீற்றிக்கொள்கிறோம் என்று அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை. உடனடியாக மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழையினால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க போதுமான தார்ப்பாய்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு துறைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த்துடன் சென்று நேரில் திடீர் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தார்ப்பாய்கள் சரிவர மூடப்படாமலும், பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனைப்பார்த்து டென்சன் ஆன அமைச்சர் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதாக பெருமையாம நாம் பீற்றிக்கொள்கிறோம் எனக்கூறி கொள்முதல் நிலையப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். நெல் மூட்டைகள் மலையில் நனையாமல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கூறினீர்கள். ஆனால், இங்கு வந்து பார்த்தால் தார்பாயங்கள் கூட ஒழுங்காக மூடப்படாமல் நெல் வீணாகும் சூழல் உள்ளது என கடிந்து கொண்ட அமைச்சர் வெங்கடரமணன் பள்ளமான இடங்களில் உள்ள மூட்டைகளை மேடான இடத்திற்கு மாற்ற வேண்டும், உடனே மாற்றி புதிய தார்பாய்களை கொண்டு மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டார் மேலும் நனைந்த மூட்டைகளை வேறு சாக்கில் மாற்றி அனைத்து பணிகளையும் இன்று இரவு உடனடியாக முடித்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

















