திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நகராட்சி நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று நகர் ஊரமைப்பு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திட்டமிடப்படாத வளர்ச்சியைத் தடுத்து, கிராமங்கள் மற்றும் நகரங்களை முறையாகவும் அழகாகவும் திட்டமிட்டு மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நகர் ஊரமைப்பு துறையின் முக்கிய நோக்கம், எதிர்கால மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகள், பூங்காக்கள், குடிநீர் வசதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை முறையாக வடிவமைப்பதாகும்.
நகரின் திட்டமிடலை வகுத்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் முக்கிய துறையான இந்த நகர் ஊரமைப்புத்துறையில், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நகர் ஊரமைப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து தஞ்சாவூர், ஈரோடு, கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் நகர் ஊரமைப்பு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்களை ஒன்றாக அமர வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகர் ஊரமைப்பு துறை அலுவலர்களின் மேஜை, நாற்காலி, கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு அலுவலர்களையும் தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொள்வதுடன் அவர்களது செல்போனை ஆய்வு செய்து ஜிபே உள்ளிட்ட யுபிஐ கணக்குகள் மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















