விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து மகளிருக்கும் 2500 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வைக் கண்டித்தும் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமக்களை, குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் பாதிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை கண்டித்தும் அவற்றை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரிசி மற்றும் சர்க்கரை விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கட்டுப்படுத்தி விலையைக் குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவோர், செயற்கை தட்டுப்பாடு உருவாக்குவோர் மற்றும் அதிக லாப நோக்கத்துடன் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 35 கிலோ அரிசியை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக வழங்க வேண்டும்,
ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தரமான அரிசி மற்றும் சர்க்கரை தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், விவசாயிகளிடமிருந்து நெல்லை உரிய விலையில் தாமதமின்றி கொள்முதல் செய்து, அரசு அரிசி கையிருப்பை அதிகரிக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி ஆண்டுக்கு ஒரு சிலிண்டர் எந்தவித நிபந்தனையுமின்றி வழங்கப்பட வேண்டும், அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகையை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.















