சென்னை மாதவரம் அருகே செட்டிபாளையத்தில் சேறும் சகதியுமான சாலையில் சிக்கிய கனரக லாரி!
சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதி – உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சென்னை: சென்னை மாதவரம் அடுத்த செட்டிபாளையம் பகுதியில், சேறும் சகதியுமாகவும் குண்டும் குழியுமாகவும் உள்ள சாலையில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கொசப்பூர் வழியாக வடகரை, வடபெரும்பாக்கம், மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் செட்டிபாளையம் அமைந்துள்ளது. இச்சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால், பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலை முறையாகச் சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சாலையின் பல இடங்களில் சுமார் இரண்டு அடி ஆழம் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இந்தச் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சென்று வருகின்றன.
சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தச் சாலையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வேலைக்குச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லவும் இதையே பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று செட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் சேற்றில் சிக்கியது. சாலையின் உறுதித்தன்மை இல்லாததால் லாரி பள்ளத்தில் சிக்கி ஒருபுறமாகச் சாய்ந்தது. அருகில் இருந்த கோயிலின் மீது லாரி சாய்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லாரி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த வழித்தடத்தில் பேருந்துகளும் இயக்கப்படுவதால், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களும் உரிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், இப்பகுதி மக்கள் அன்றாடப் பயணங்களுக்குக்கூட பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். சேறும் சகதியுமான சாலையில் கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
எனவே, சாலையில் சிக்கியுள்ள கனரக லாரியை உடனடியாக அப்புறப்படுத்தவும், சேதமடைந்த சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சாலையை முறையாகச் சீரமைத்து, போதிய தெருவிளக்குகளை அமைத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















