திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்
திருவாரூர் – மன்னார்குடி சாலை ஓரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கும்போது சாலையோரம் முழுமையாக மூடப்படாமல் இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக கூறியும், அதிகாரிகள் சரி செய்ய மறுப்பதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவாரூர் – மன்னார்குடி – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு வருகின்றன. இந்த குழாய்களை போடும்போது சாலையோரம் குழி வெட்டி குழாய்களை பதிக்கும் நிலையில் மீண்டும் குழிகளை மூடாமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்து வருகின்றனர்.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரம் பெரிய அளவிலான குழிகள் காணப்படுகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் அந்த குழிகள் முழுவதும் நீர் நிரம்பி காணப்படுகிறது. மேலும் சாலையிலும் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சாலை ஓரம் செல்லும்போது இந்த குழிகளில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக திருவாரூர் அருகே குளிக்கரை, கொட்டாரக்குடி, கமலாபுரம், பாரதி மூலங்குடி, சித்தன்னக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை விவரம் மிகப்பெரிய அளவிலான குழிகள் காணப்பட்டு அதில் நீர் நிரம்பி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் சாலை ஓரம் செல்லும்போது இந்த குழிகளில் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது.
தினம்தோறும் 10க்கும் அதிகமான விபத்துக்கள் இந்த பகுதியில் நிகழ்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இதனை சரி செய்ய கோரி பலமுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் அருகே பாரதி மூலங்குடி பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையோரம் உள்ள புள்ளிகளில் குழிகளில் பெரிய அளவிலான கற்களை வைத்து மூடி வைக்க முயற்சி செய்தனர்.
இருந்த போதும் தொடர்ந்து அந்த பகுதியில் சாலை விபத்து நிகழ்வதால் திடீரென திருவாரூர் மன்னார்குடி சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருவாரூர் மன்னார்குடி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
உடனடியாக இந்த பகுதியில் உள்ள பள்ளங்களை சரி செய்து தராவிட்டால் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி : கோபி – மூலங்குடி பகுதி வாசி

















