சென்னையில் இருந்து சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் பயணித்த பயணிகள் மழைநீரில் நனைந்தபடி பயணித்த அவலம் – கனமழையின் காரணமாக பேருந்தின் மேற்கூரை வழியே வழிந்த மழைநீரை ஓட்டுநரே சரி செய்யும் காட்சிகள் வெளியாகி அரசு பேருந்துகளின் உண்மை நிலையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது
சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்தின் மேற்கூரை பழுதடைந்து மழைநீர் உள்ளே புகுந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஓட்டுநரே தனது இருக்கைக்கு மேல் உள்ள கூரையைச் சரிசெய்யும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அரசு பேருந்துகளின் அவல நிலையை வெளிப்படுத்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 10:30 மணிக்கு சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு TN01 AN4158 என்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்து தடம் எண் 340 வழியாக புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கமாக பாண்டிச்சேரி, கடலூர் , திருவாரூர் வழியாக இயக்கப்பட்டது.
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இரவு முதலே பரவலாக கன மழை பெய்ய தொடங்கியது. இதனால் பேருந்தின் மேற்கூரை முறையாகப் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து இருந்ததால், அதன் வழியாக மழைநீர் ஒழுகி பேருந்தின் உள்ளே புகுந்தது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் நனைந்து, குளிரிலும், மழையிலும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
மழைநீர் அதிகமாக ஒழுகியதால், பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் இருக்கைப் பகுதியும் முற்றிலும் நனைந்தது. இதனால் பேருந்தை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ஓட்டுநர் தனது இருக்கையின் மேல் இருந்த பழுதடைந்த கூரையைத் தற்காலிகமாகப் பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவர் பேருந்தின் கூரையைச் சரிசெய்யும் காணொளி காட்சிகள் வெளியாகி, அரசுப் பேருந்துகளின் தரமற்ற பராமரிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இது குறித்துப் பேருந்தில் பயணித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா கூறுகையில், “அரசு விரைவுப் பேருந்துகளில் (SETC) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளோ, முறையான பராமரிப்போ இல்லை. நள்ளிரவில் மழைநீரில் நனைந்தபடி பயணித்தது நரக வேதனையாக இருந்தது” என்று தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். மேலும் ஏழை,எளிய மக்கள் பயணிக்கும் தொலைத்தூர பேருந்துகள் காகித கப்பல்களாகவும், அதை மூடி மறைப்பதற்கு இலவச பயணத்திட்டம் என மக்களை மடைமாற்றம் செய்யுது வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசையும், போக்குவரத்துத்துறையையும் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக அனைத்துப் பேருந்துகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்துப் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற பழுதடைந்த பேருந்துகளைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















