திருவாரூரில் பட்டப்பகலில் ஆடு திருடிய இரு நபர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருவாரூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே, ஆறுமுகம் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த இரு நபர்கள், அந்த ஆடுகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளரும், அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து ஆடு திருடர்களை மடக்கிப் பிடித்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீசார், ஆடுதிருட்டில் ஈடுபட்ட திருவாரூர் விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்த மனோகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் பகுதியை சேர்ந்த சந்துரு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் திருடப்பட்ட 1 ஆண் ஆடு, 1 பெண் ஆடு ஆகியவை மீட்கப்பட்டு ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருவாரூரில் பட்ட பகலில் ஆடு திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

















