தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி விவசாய சங்கத்தினரை, வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர், வேனில் ஏற மறுத்து, சாலையில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளால் பரபரப்பு :-
தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தபடி அனைத்து விதமான பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான கூட்டுறவு பயிர் கடன் உடனடியாக வழங்க வேண்டும், காவிரியில் நமக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி மங்கைநல்லூர் இலுப்பூர், குத்தாலம் கொள்ளிடம் ஆகி இடங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைராஜ் தலைமையில், ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர், அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏற மறுத்து கொட்டும் மழையில் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

















