சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மாடு மீது கார் மோதி நிகழ்ந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ராஜ சபரீஷ். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சிதம்பரத்திலிருந்து திருக்கடையூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு நான்கு வழி புறவழிச்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் காரின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் மாட்டின் மீது மோதியதோடு, அருகே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இருசக்கர வாகனத்தில் பயணித்த காரைமேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.கவலறிந்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம், படுகாயமடைந்த ஆனந்த், கௌசல்யா மற்றும் காரில் பயணித்த ராஜ சபரீஷ் குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சீர்காழி புறவழிச்சாலையில் நாளுக்கு நாள் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விபத்துகளுக்குக் காரணமாக விளங்கும் சாலையோர பேரிகார்டு மற்றம் கால்நடைகளைக் கட்டுப்படுத்தவும், வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















