வலங்கைமானில் நகைக்காக மூதாட்டியை இரும்புராடால் அடித்துக் கொன்று ஏழு சவரன் தங்க நகைகள் கொள்ளை. காவல்துறையினருடன் இனைந்து குற்றவாளியை தேடுவது போல் நடித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் கைது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபநாசம் அருகே உத்தானி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரின் மனைவி கலைச்செல்வி (52). இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அப்பகுதியில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ரேவதி பாபநாசத்திலும், மாலதி வலங்கைமானிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மாதத்தில் பெரும்பாலும் மகள்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவ்வப்போது சில நாட்கள் மட்டும் வீட்டில் தனியாக கலைச்செல்வி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளுடன் பேசியவர் நேற்று காலையிலிருந்து இருவரிடமும் பேசவில்லை. இதையடுத்து மகள்கள் பக்கத்து வீடு கார்த்தி என்பவரிடம் தகவல் கொடுத்து தாயைச் சென்று பார்க்குமாறு சொல்லி உள்ளனர். கார்த்தி சென்று பார்த்த பொழுது கலைச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
கலைச்செல்வி வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கலைச்செல்வியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த மூன்று பவுன் செயின், தோடு, மாட்டல், வளையல், மோதிரம் என ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளார்.
இதனையடுத்து இரண்டாவது மகள் மாலதி (37) வலங்கைமான் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து தஞ்சாவூர் சரி டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்படி நன்னிலம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். மேலும் சிசிடிவி மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர்களுடன் தேடுவது போல் நடித்து வந்த ஒரு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் உயிரிழந்த கலைச்செல்விக்கு தெரிந்தவரான பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அறிவுமணி என்பது தெரியவந்தது.
அதனை அடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பாபநாசம் சுந்தர பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகனான அறிவுமணி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ரம்மி விளையாடி அதில் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் பிரச்சனையில் சிக்கிய அவர், எப்படியாவது கடன் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்து வந்த நிலையில், மூதாட்டி தனிமையில் வசித்து வருவதை தெரிந்து கொண்டு மூதாட்டி கலைச்செல்வியை தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார். மூதாட்டி தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட அறிவுமணி அனைவரும் உறங்கும் சமயம் பார்த்து அவர் அணிந்திருந்த நகையை பறிப்பதற்காக கலைச்செல்வியை இரும்பு ராடால் அடித்துக் கொன்று விட்டு காவல்துறையினருடன் சேர்ந்து குற்றவாளியை தேடுவது போல் நடித்தது அம்பலமாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அறிவுமணியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட அறிவுமணிக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளனர்
வலங்கைமாணில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றவுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், ஆய்வாளர் ரேகா ராணி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே இருந்து குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

















