தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அடுத்த 15 நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் நாகையில் பேட்டி
தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், அடுத்த 15 நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை கால முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்புப் பணிகளைப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் . சோமசுந்தரம் நேரில் பார்வையிட்டுத் தீவிர கள ஆய்வு மேற்கொண்டார்.
நாகை டாட்டா நகர், நாகூர் சம்பா தோட்டம் மற்றும் சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், கொசுப்புழு ஒழிப்பு மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளைப் பார்வையிட்டார். தெற்கு பொய்கைநல்லூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்த அவர், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள காய்ச்சல் மற்றும் டெங்கு சிறப்பு வார்டுகள், ரத்தப் பரிசோதனை வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் டாக்டர் . சோமசுந்தரம் தெரிவித்ததாவது:
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு டெங்கு, ஒட்டுண்ணி காய்ச்சல் , எலி்க்காய்ச்சல் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஜூன் மாதம் முதலே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வெகுவாகக் குறைந்துள்ளன.
அரசு மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சலுக்கான ‘ஓசல்டாமிவிர்’ மாத்திரைகள், டெங்கு சிகிச்சைக்கான ஐவி திரவங்கள், ஓ.ஆர்.எஸ் கரைசல்கள் மற்றும் கொசுவலைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், ஒட்டுண்ணி காய்ச்சலுக்கான ‘டாக்ஸிசைக்ளின்’ மாத்திரைகள், கொசுப்புழுக்களை அழிக்கும் ‘டெமிபாஸ்’ மற்றும் புகை மருந்து தேவையான அளவு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்குச் சுமார் 200 டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 10 முதல் 15 நாட்களாக இந்த எண்ணிக்கை சீராக நீடித்து வரும் நிலையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அடுத்த 15 நாட்களில் பாதிப்புகள் மேலும் குறையும்.
இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார், தஞ்சாவூர் மண்டல பூச்சியியல் வல்லுநர் திருமலை வெங்கடேசன், மாவட்ட மலேரியா அலுவலர் வீரையா உள்ளிட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.














