நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
நாகப்பட்டினத்தில் இந்து முன்னணி விநாயகர் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மீது இருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அவர் தற்போது ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்து முன்னணி அமைப்பின் நாகை மாவட்ட விநாயகர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் என்.கே.ஆர். செழியன். இவர் செப்டம்பர் 29 மாலை நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் தேரடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிர்மல் ஆகிய இருவரும், செழியனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு ராடு உள்ளிட்டவற்றைக் கொண்டு திடீரெனத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவருடன் இருந்தவர்கள் தாக்குதலைத் தடுக்க முயன்றும் தடுக்க முடியாத சூழலில், அங்கிருந்த இரும்புக்கடைப் பகுதிக்குத் தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது; ஆனால் போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பொதுவெளியில் நடைபெற்ற இத்தாக்குதலில் செழியனுக்கு இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு எழுந்திருக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், நாகை மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் இந்து முன்னணி அமைப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் விவேக் உள்ளிட்ட நிர்வாகிகள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், “தாக்குதலில் ஈடுபட்ட சுரேஷ் மற்றும் நிர்மல் மீது உரிய விசாரணை நடத்தி, உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சட்டப்பூர்வமாக அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குவதோடு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்து முன்னணி சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















