குத்தாலத்தில் கைவிடப்பட்ட எண்ணெய்- எரிவாயு கிணற்றில் ஓஎன்ஜிசி நிறுவனம் துரப்பன பணியை மேற்கொள்வதாக கிராமமக்கள் குற்றச்சாட்டு:- பணிகளை தடுத்து நிறுத்த வருவாய் கோட்டாட்சியரிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கேயுடி 3 என்ற கைவிடப்பட்ட பழைய எண்ணெய்-எரிவாயு கிணற்றில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறுவது மராமத்து பணி (பராமரிப்பு பணி) என ஓஎன்ஜிசி தெரிவித்த நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் மறைமுகமாக துரப்பன பணியை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் அப்பணிகளை அண்மையில் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெறுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் இன்று புகார் தெரிவித்தனர். பின்னர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பராமரிப்பு என்ற பெயரில் மறைமுகமாக ஓஎன்ஜிசி நடத்தும் அனைத்து பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அந்த கிணறு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்பகுதியில் கிணறு அமைப்பதற்கு முன்பு அங்கு இருந்த தண்ணீரின் தரம் என்ன? இன்றைக்கு நிலத்தடி நீரின் தரம் என்ன? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். அந்த கிணறு அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஏராளமான குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் உள்ளதால் ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொள்ளும் துரப்பன பணியின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் வீணாகி கச்சா எண்ணெய் கலந்த தண்ணீரையே குடிக்கிறார்கள். இதன் காரணமாக புற்று நோயாளியாக மாறி உள்ள சிலரும் இங்கு வந்துள்ளார்கள். பூமிக்கு அடியில் பக்கவாட்டுக் கிணறு அமைக்கும் பணியை தொடங்கிய போது எங்கள் போராட்டத்தின் காரணமாக அவற்றை தற்காலிகமாக விலக்கிக் கொண்ட ஓஎன்ஜிசி நிறுவனம். தற்போது அதன் அருகில் உள்ள மற்றொரு இடத்தில் பணியை தொடங்கி உள்ளார்கள். நேற்று நாங்கள் சந்தித்த நிலையை விளக்கிய போது ஏற்றுக்கொண்ட கோட்டாட்சியர். இன்று ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு பராமரிப்பு பணியை தொடரலாம் என அனுமதி அளித்துள்ளார். ஓஎன்ஜிசி நிர்வாகம் கூறுவதை தான் அதிகாரிகள் கேட்கிறார்கள் என்றார்.
பேட்டி: பேராசிரியர் த.ஜெயராமன்.

















