நாகையில் ரூ.10 கோடி மதிப்பிலான 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: தப்பியோடிய வீட்டின் உரிமையாளருக்கு வனத்துறை வலைவீச்சு:
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நாகப்பட்டினத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ₹10 கோடி சர்வதேச மதிப்பிலான 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வீட்டின் உரிமையாளரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் சியாம் சுந்தர் தலைமையில் வனவர் இந்துமதி, வனக் காப்பாளர்கள் உலகநாதன், ஆயிஷா, வனக் காவலர் சுதாகர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் நாகை கீரைக்கொல்லைத் தெரு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கைவிடப்பட்ட குடியிருப்பின் பின்புறம் சட்டவிரோதமாகக் கடல் அட்டைகள் பதுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அருகிலிருந்த சந்தேகத்திற்குரிய வீட்டை வனத்துறையினர் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹10 கோடி இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் உடனடியாக நாகப்பட்டினம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இச்சம்பவம் குறித்து வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள வனத்துறையினர், தப்பியோடிய வீட்டின் உரிமையாளரை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், இந்தக் கடல் அட்டைகள் எங்கிருந்து பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

















