பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம் வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேச கேள்வி பதில் சொல்லமுடியாமல் நிசப்தமான அதிகாரிகள்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரியும், பயிர் காப்பீட்டு முறையை சீரமைக்கக் கோரியும் விவசாயிகள் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வேட்டங்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், 35 கிராமங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் “கிளைம் பெண்டிங்”) என வைக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விளைச்சல் தரவு போர்ட்டலில் சரியாக பதிவேற்றப்படாததாலும், அதில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளாலும் தான் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், தங்களின் தவறை மறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இழுத்தடிப்பதா?” என்று விவசாயிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டுவதாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் விவசாய சங்க பிரதிநிதி ஆறுபாதி கல்யாணம் குற்றம்சாட்டி கூறுகையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை பிரீமியமாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வந்து சேருவதில்லை. காப்பீட்டு நிறுவனங்களின் பணி பிரீமியம் பெறுவது மற்றும் கிளைம்களை செட்டில் செய்வதற்கான முகமை பணிகளைச் செய்வது மட்டுமே தவிர, விவசாயிகளுக்கான இழப்பீட்டைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இருக்கக்கூடாது. இந்த அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும்; அரசு வழங்கும் பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அரசே நேரடியாக விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். “காப்பீட்டுப் பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் குறைந்தபட்சம் 20% அடிப்படை கிளைம் உத்தரவாதமாக வழங்கப்பட வேண்டும். அதில் 10% மத்திய அரசும், 10% மாநில அரசும் பகிர்ந்தளிக்க வேண்டும். 20%-க்கு மேல் ஏற்படும் இழப்புகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு விவசாயியும் நஷ்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்” என்றும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தினார். முந்தைய சம்பா பருவத்தில் பல இடங்களில் நிலப்பரப்பிற்கு அதிகமாகவே இரட்டைப் பதிவுகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் “இன்றைய கணினி மயமாக்கப்பட்ட சூழலில், ஒரு நிலத்திற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை ஒரே மாதத்தில் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும். ஆனால், அதிகாரிகள் இதை முறையாகச் சரிசெய்யாமல் உண்மையான நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கான நிவாரணத்தைத் தாமதப்படுத்துகின்றனர் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பாசனத்திற்காகக் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் முறையாகத் தண்ணீர் வந்து சேரவில்லை. பல இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், நீர் வரத்து இன்மையாலும் வீடுகளுக்கான குடிநீர் மோட்டார்களே இயங்க முடியாத வறட்சி ஏற்பட்டுள்ளது. சீர்காழி போன்ற வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெயர் மாறுதலுக்கான மனுக்கள் மாதக்கணக்கில், பலமுறை அலைக்கழிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்படுவதாக கின்றன. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் உரிய காலத்தில் வெளிப்படையான பதில் வழங்கி, நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையையும் பாசன நீரையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவசாயிகள் கூட்டாக வலியுறுத்தினர்.

















