திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம் – தேவலோகம்போல் ஆலய பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு*
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவ விழாவில் ஆலய மூலஸ்தான பிரகாரம் தேவலோகம்போல் அலங்கரிக்கப்பட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டனர்.
சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் கோவில்களின் கோவில் என அழைக்கப்படும் தொன்மைசிறப்புமிக்க ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய நிறைபணி விழாவானது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் மாலை சாயரட்சை வேளையில் நடைபெறக்கூடிய பிரத்தியோக விழா.
தேவலோகத்தில் தேவர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தினமும் வழிபட்டவந்த நிலையில், முசுகுந்த சக்கரவர்த்தி மன்னன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தேவேந்திரனிடம் வரமாக பெற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை பெற்று பூலோகத்திற்க்கு கொண்டுவந்து ஆலயம் அமைத்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
இதனால் தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை தினசரி வழிபட முடியா நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தேவேந்திரன் ஸ்ரீதியாகராஜ சுவாமியை பூலோகத்திற்கு வந்து வழிபட வேண்டியபோது அதற்கு ஸ்ரீதியாகராஜ சுவாமி புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர நாளில் அதாவது மாலை 6 மணிக்கு நடைபெறும் சாயரட்சை காலத்தில் மட்டும் வழிபட அனுமதித்ததாக புராணம் கூறுகிறது.
இந்த ஐதீகத்தின் படி புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினமான நேற்று இரவு நிறைபணி விழாவாக கொண்டாடப்பட்டது.
நிறைபணி விழாவினையொட்டி பூலோகத்திற்க்கு தேவேந்திரன் வருவதற்கு ஏற்ப தேவலோகம் போன்று ஸ்ரீதியாகராஜ சுவாமி அருள்பாலிக்கும் மூலஸ்தான பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண புடவைகளாலும், பழங்கள், காய்கறிகள், வாழைமரம், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாயரட்சை காலமான மாலை 6 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு விஷேச பூஜைகளும், இரவு முகுந்தா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நிறைபணி விழாவில் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டால் தேலோகத்தில் கிடைப்பதை போன்று அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழலாம் என்ற ஐதீகத்தின் பேரில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீதியாகராஜ சுவாமியை மனமுருக வழிபட்டனர்













