பட்டாபிராம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து – சாலையில் நின்ற கண்டெய்னர் லாரி மீது டாரஸ் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு – போலீசாரின் தாமதத்தால் விபத்து ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு..
பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்துவதில் பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு..!
விபத்து நடந்து 6 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்களுக்கு இடையே சிக்கி உள்ள ஓட்டுனரின் உடலை மீட்கும் பணியில் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் மேம்பாலம் அருகே பழுதாகி நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது,லோடு டாரஸ் லாரி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் டாரஸ் லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து வ/26 என்ற ஓட்டுநர் உடல் நசுங்கி உயிருக்கு போராடி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த கண்டெய்னர் லாரி, பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் இருந்ததாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தும் கண்டைனர் லாரி நின்றதை நெடுஞ்சாலை ரோந்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு லாரியின் பாகங்களுக்குள் ஓட்டுநரின் உடல் சிக்கியிருந்ததால், உடலை உடனடியாக மீட்க முடியவில்லை.
விபத்து நடந்து 5மணி நேரம் கழித்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் இரும்பு வெட்டும்,கட்டிங் இயந்திரம் மூலம் லாரியின் பாகங்களை உடைத்து, நசுங்கி உயிரிழந்த ஓட்டுநரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து காரணமாக பட்டாபிராம் மேம்பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பழுதாகி நின்ற கனரக வாகனங்களுக்கு உரிய எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? – போலீசாரின் அலட்சியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

















