மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம். புனித நீர் அடங்கிய கடங்கள், 108 சங்குகள் ஹோமத்தில் பூஜிக்கப்பட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை டவுன் ரெண்டாம் நம்பர் புது தெருவில் ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு பூர்த்தியான நிலையில் முதலாம் ஆண்டு சம்வத்ஸ்ராபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன், பரிவார தெய்வங்களான வீரன் முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூரணாகுதி செய்யப்பட்டு காளியம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பால் பழம் மஞ்சள் திரவியப் பொடிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.














