நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்: புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு;
நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறுசீரமைப்புப் பணிகளுக்கான ‘SSA-2’ சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி நடைபெற்ற இந்நிகழ்விற்கு, திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் பி.வி.ஆர். விவேக் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.என். அமிர்தராஜா, மாவட்டச் செயலாளர் காமராஜ், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் லியோ, மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் மோகன்தாஸ், முன்னாள் நகரச் செயலாளர் ராமதாஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின்போது, வரவிருக்கும் பணிகளை முன்னிட்டு கட்சியின் களப்பணிகளை தீவிரமாக முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள தகுதியான நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆய்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, தொகுதி, வட்டார மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
















