கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது ஜெயந்தி விழா –
மேல்வாலை, கெடார். சி. பழநிவேலு ஆசிரியர் அவர்களின் ஆன்மத் துணையுடன் இயங்கி வரும் மேல்வாலை–கண்டாச்சிபுரம் பழநிவேலு கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு, அவரது 121-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்ட கிருபானந்த வாரியார் இலக்கியப் பேரவையின் மாவட்டத் தலைவர் ஜெயராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆகம விதிப்படி சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய நன்னெறி போதனைகள் மற்றும் ஆன்மீக கருத்துகள் குறித்து விழுப்புரம் அருணை அச்சக உரிமையாளர் தே. ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
விழாவின் நிறைவாக, வாரியார் சுவாமிகளின் திருவருள் நிறைந்த கடலளவிலான நன்னெறிச் சிந்தனைகளை நினைவுகூரும் வகையில், பள்ளி நிர்வாகத்தின் பயன்பாட்டிற்குத் தேவையான தகவல் பரிமாற்றப் பொருட்கள் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன.
வாரியார் சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆன்மிகப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














